பால்வினை நோய்

இருவருக்கு இடையிலான உடல் உறவின் மூலமாகவே இந்நோய்கள் பெரும்பாலும் பரவுகின்றன. உலக அளவில் பரவலாக இருப்பது மட்டும் அல்லாமல், சரியான நேரத்தில் பலனளிக்கும் வகையில் சிகிச்சை பெறாவிட்டால் கடுமையானதும் நிரந்தரமானதுமான சிக்கல்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும் திறன்கொண்டவை என்பதாலும் இவை பொது சுகாதார அக்கறையின் பால் பட்டவைகளாகத் திகழ்கின்றன. மலட்டுத்தன்மை, கருவிரயம், இடமாறும் கர்ப்பம், ஆசனவாய்-பிறப்புறுப்புப் புற்று, அகால மரணம் ஆகியவை மட்டுமல்லாமல் பிறந்தகுழந்தை, சிசு தொற்று நோய்களும் பால்வினை நோய்களின் சிக்கல்களும் இதன் பின்விளைவுகள் ஆகும். எச்.ஐ.வி. வைரஸ் தொற்று பரவவும் பால்வினை நோய்கள் துணைபுரிகின்றன.

முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உடலுறவால் பரவும் பாக்டீரியாக்கள், வைரசுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. மேகவெட்டை, கிளாமைடியா தொற்று, மேகநோய், திரிக்கோமோனியம், மென்கிராந்தி, புறப்புறுப்பு அக்கி மற்றும் பருக்கள், எச்.ஐ.,வி, கல்லீரல் அழற்சி  B  போன்றவை பால்வினை நோயால் ஏற்படும் முக்கியமான நோய்கள் ஆகும்.

குறிப்பாக எச்.ஐ.வி., மேகநோய் போன்ற பல பால்வினை நோய்கள் கர்ப்ப மற்றும் பேறுகாலத்தின் போது தாயிடம் இருந்து சேய்க்கும், இரத்தப் பொருட்களின் மூலமும், திசு மாற்றத்தின் போதும் பரவுகின்றன.

உலக சுகாதர நிறுவனத்தின் புள்ளி விவரம் தினமும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஏதோ ஒரு பால்வினை நோயைப் பெறுவதாகக் கூறுகிறது. குணப்படுத்தக் கூடிய நான்கு பால்வினை நோய்களில் (கிளாமைதியா, மேகவெட்டை, மேகநோய் மற்றும் திரிக்கோமோனியம்) ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் 50 கோடிப்பேர் புதிதாகப் பெற்றுக்கொள்ளுவதாக உ.சு.நி. கணக்கிடுகிறது.

பால்வினை நோய் இந்தியாவில் ஒரு முக்கியமான பொதுச்சுகாதாரப் பிரச்சினையாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிப் பேரவை சமுதாய அடிப்படையில் 2002-2003-ல் நடத்திய பால்வினைநோய்த் தாக்க ஆய்வின்படி இந்தியாவின் வயதுவந்தோரில் 6% பேர் ஏதாவது ஒருவகைப் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறிந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 3-3.5 கோடி புதிய பால்வினைத் தொற்று ஏற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

பெரும் பகுதியான இளைஞர்களும், இளம்வயதினரும் புதிய பால்வினை நேர்வில் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டிருப்பது பற்றி அவர்களுக்குத் தெரிவதுமில்லை. இது அவர்களது எதிர்கால உடல் உறவுப் பழக்க வழக்கங்களிலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream

apps.who.int/iris/bitstream

/www.who.int/reproductivehealth

apps.who.int/iris/bitstream

www.who.int/mediacentre/factsheets

naco.gov.in/upload/

பெரும்பானமையான பால்வினை நோய்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. வெளிப்படையான அறிகுறிகுறிகளைக் காட்டாமலேயே ஒருவருக்குப் பால்வினை நோய் இருக்கலாம். இதனால்தான் பால்வினையால் பரவும் நோய்கள் என்பதற்குப் பதிலாக அதைவிட அதிகப் பொருள் ஆழமுடைய பால்வினையால் பரவும் தொற்று என்றச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.

பால்வினை நோயில் அடங்கும் அறிகுறிகள்:

 • பிறப்புறுப்பில் இருந்து அசாதாரணக் கசிவு
 • பிறப்புறுப்புப் பகுதியில் புண் அல்லது பருக்கள்
 • வலியோடு அல்லது அடிக்கடி சிறுநீர்கழித்தல்
 • பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பும் சிவப்பும்
 • வாயைச் சுற்றி கொப்புளம் அல்லது புண்கள்
 • பெண்ணுறுப்பில் அசாதாரணமான துர்நாற்றம்
 • ஆசன வாய் அரிப்பு, புண் அல்லது குருதிக்கசிவு
 • வலிமிகுப்புணர்ச்சி
 • வயிற்றுவலி
 • காய்ச்சல்

குறிப்புகள்:

naco.gov.in/upload/2014

www.nichd.nih.gov/health

30 வெவ்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரசுகள், பாரசைட்டுகளால் பால்வினை நோய்கள் உண்டாகின்றன. முக்கியமான பால்வினை நோய்களும் அவற்றின் காரணங்களும்:

 • பாக்டீரியா – கிளமைதியா டிராக்கோமேட்டிஸ் (நோய் – கிளமைதியா) நெய்சேரியா கொனேரியா (நோய்- கொனேரியா) மற்றும் டிரபோனிமா பல்லிடம் (நோய் – மேக நோய்)
 • வைரசுகள் – மனித நோய்த்தடுப்புக் குறைபாட்டு வைரஸ் (எச்.ஐ.வி/எய்ட்ஸ்), சிற்றக்கி வைரஸ் (நோய் – பிறப்புறுப்பு அக்கி) மனிதப் பேப்பிலோமா வைரஸ் (நோய் – பிறப்புறுப்புப் பருக்கள்), கல்லீரல் அழற்சி B வைரஸ் (கல்லீரல் அழற்சி) மற்றும் சைட்டோமெகாலோவைரஸ்.
 • ஈஸ்ட்டுகளும் ஓரணு ஒட்டுண்ணிகளும்: திரிக்கோமோனாஸ் வெஜினாலிஸ் (நோய் – திரிக்கோமோனியம்), பெண்ணுறுப்புப் பேன் (நோய் – பெண்ணுறுப்புப் பேன்) சர்கோப்டஸ் ஸ்கேபியல் (நோய்-சொறி சிரங்கு).

பால்வினை நோய்ப் பரவல்:

 • பெண்ணுறுப்பு, ஆசனவாய் மாற்றும் வாய்வழி பால்வினைகளை உள்ளடக்கிய உடலுறவுத் தொடர்பினாலேயே பெரும்பாலும் பால்வினை நோய்கள் பரவுகின்றன.
 • சில பால்வினை நோய்கள் தோலோடு தோல் தொடர்புகொள்ளும் பால்வினைகளாலும், இரத்தப் பொருட்கள், திசு மாற்றம் போன்ற உடலுறவு அற்ற வகைகளாலும் பரவலாம்.
 • பல பால்வினை நோய்கள் (கிளமைதியா, மேகவெட்டை, கல்லீரல்  B, எச்.ஐ.வி., எச்.பி.வி., எச்.எஸ்.வி-2 மற்றும் மேக நோய்) கர்ப்பத்திலும் பேற்றிலும் தாயிடம் இருந்து சேய்க்குப் பரவும்.

பரவலை அதிகரிக்கும் ஆபத்துக் காரணிகள்:

பால்வினை நோய் தொற்று பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. இவற்றில் உயிரியல் மற்றும் நடத்தையில் காரணிகள் அடக்கம்:

உயிரியல் காரணிகள்: பால்வினை நோய்கள் பரவலில் சில உயிரியல் காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வயது, பால், ஓம்புயிரின் நோய்த்தடுப்புத் திறன், உயிரியின் தீவிரத்தன்மை ஆகியவையே அவை.

வயது – பெண்கள் ஆண்களை விட இளம் வயதில் பாதிக்கப்படுகின்றனர்.

பால் – பெண்கள் ஆண்களை விட எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

நோய்த்தடுப்பு நிலை – ஓம்புயிரின் நோய்த்தடுப்புத் திறனும் தொற்றைப் பரப்பும் உயிரின் தீவிரத் தன்மையும் பால்வினை நோய்பரவலில் பாதிப்பை ஏற்படுத்தும். சில பால்வினை நோய்கள் எச்.ஐ.வி. பரவல் ஆபத்தை அதிகரிக்கிறது. இது நோய்த்தடுப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி மேலும் சில பால்வினை நோய் பரவலையும் சிக்கல்களையும் அதிகரிக்கிறது.

நடத்தையியல் காரணிகள்: பல நடத்தையியல் காரணிகளும் பால்வினை நோய் பரவ உதவுகின்றன. இவை ஆபத்தான நடத்தைகள் எனப்படும். அவற்றில் அடங்குவன:

 • உடலுறவு இணையரை அடிக்கடி மாற்றுதல்
 • ஒன்றுக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு கொள்ளுதல்
 • தற்செயல் இணையருடனும், பாலியல் தொழிலாளர் அல்லது அவரது வாடிக்கையாளரிடம் உடல் உறவு
 • இரு இணையருக்குமே தொற்று இருக்கும்நிலையில் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொள்ளுதல்
 • கடந்த ஆண்டு ஒரு பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால்

சமூகக் காரணிகள்: உடலுறவு, நடத்தைப் பிரச்சினைகள் போன்ற பல சமூகக் காரணிகள் பால்வினை நோய் ஏற்படுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பிற தனிப்பட்ட பழக்கவழக்கங்களான தோல் துளையிடல், கிருமியகற்றாத ஊசியால் மருந்து செலுத்துதல் அல்லது பச்சைக் குத்துதல், மது பயன்பாடு போன்றவையும் பால்வினை நோய் பரவும் ஆபத்தை அதிகரிக்கும்.

நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் குழுக்கள்:

 • உடலுறவில் தீவிரமாக இருக்கும் இளம்பெண்கள்
 • பாலியல் தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களும்
 • பல உடல் உறவு இணையர் உள்ள ஆண் பெண்கள்
 • தொடர் உடலுறவு இணையரிடம் இருந்து நீண்ட காலம் பிரிந்திருக்கும் நீண்ட தூர ஓட்டுநர், போர்வீரர், இடம்விட்டு இடம்பெயரும் தொழிலாளர்கள் போன்றோர்.
 • ஆணோடு உடலுறவு கொள்ளும் ஆண், பாலியல் பிறழ்ச்சி அடைந்தோர் உட்பட.
 • தெருக்குழந்தைகள், சிறைச்சாலை வாழ்நர்

குறிப்புகள்:

naco.gov.in/upload/2014

/www.who.int/mediacentre

apps.who.int/iris/bitstream

www.emedicinehealth.com

www.nichd.nih.gov/health

கூடுதல் வருமானம் கொண்ட நாடுகளில் துல்லியமான பால்வினை சோதனைகள் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. அறிகுறிகள் அற்ற தொற்றுகளுக்கு இவை குறிப்பாகப் பயனுள்ளவை.

ஆயினும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் கண்டறியும் சோதனைகள் பரவலாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பெரும்பாலும் அதிகக் கட்டணம் கொண்ட்தாகவும் தொலைதூரத்தில் உள்ளவையுமாய் இருக்கும். முடிவைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க அல்லது திரும்பிவர வேண்டி இருக்கும். இதனால் தொடர் கவனிப்பு இல்லாமல் மருத்துவமும் அரைகுறையாகப் போய்விடும்.

மேக நோய்க்கு மட்டுமே ஒரு மலிவான விரைவான இரத்தப் பரிசோதனை தற்போது உள்ளது. பேற்றுக்கு முன்னான பராமரிப்பின் போது இது பயன்பாட்டில் ஏற்கெனவே உள்ளது.

பால்வினை நோய்களுக்கான பல துரித சோதனைகள் உருவாக்கத்தில் உள்ளன. பால்வினை நோய்களுக்கான கண்டறிதலும் மருத்துவமும், குறிப்பாகக் குறைந்த வசதிகள் கொண்ட சூழலிலும் பயன்படுத்தும் அளவுக்கு மேம்படும் வாய்ப்புகள் உள்ளன.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/

www.nhp.gov.in/disease/syphilis

பால்வினை நேர்வு நோய்மேலாண்மை என்பது பால்வினை நோய் அறிகுறிகள் கொண்ட அல்லது ஒன்று அல்லது பல பால்வினை நோய்களுக்கு நேர்மறை சோதனை முடிவுகள் கொண்ட ஒருவரைப் பராமரிப்பதே ஆகும்.

நோய்மேலாண்மையில் அடங்கும் கூறுகள்: நோய்வரலாற்றை அறிதல், ஆய்வகச் சோதனை, சரியாகக் கண்டறிதல், ஆரம்பக் கட்ட மற்றும் பலனளிக்கும் மருத்துவம், உடலுறவு நடத்தை பற்றிய ஆலோசனை, காப்புறை பயன்பாட்டு அவசியம் உணர்த்தி காப்புறையும் அளித்தல், இணையருக்கு அறிவித்து மருத்துவம் அளித்தல், நேர்வு அறிவித்தல் மற்றும் பொருத்தமான மருத்துவத் தொடர் நடவடிக்கை. இவ்வாறு, பலனளிக்கும் நேர்வு மேலாண்மையில், நுண்ணுயிரி எதிர் சிகிச்சை அளித்து குணம் பெறுவதும் தொற்றைக் குறைப்பதும் மட்டுமல்லாமல் பரந்துபட்ட அளவில் நோக்கி நோயாளியின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும் ஆகும். பால்வினை நோய்ப் பராமரிப்பில் அடங்குவன:

() நோய்த்தாக்க மேலாண்மை:  உலக சுகாதார நிறுவனம் நோய்த்தாக்க மேலாண்மையைப் பரிந்துரைத்துள்ளது. ஆய்வகச் சோதனைகளைப் பயன்படுத்தாமல் மருத்துவத்தை வழிகாட்ட நிலைத்த அறிகுறிகள் மற்றும் எளிதல் இனங்காணக்கூடிய  குறிகளையும் அடையாளம் காணுவதை அடிப்படையாகக் கொண்டது ஆகும். 

கண்காணிக்கப்படும் நோய்த்தாக்கக் குறிகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்டத் தொற்றைக் கண்டறிய சுகாதாரப் பணியாளரை இந்த அணுகுமுறை அனுமதிக்கிறது. நோய்த்தாக்க மேலாண்மை எளிமையானது; விரைவானது; அதே நாளில் சிகிச்சை அளிக்கக்கூடியது; அதிகக் கட்டணம் அற்றது; இதன் மூலம் எளிதில் கிடைக்காத கண்டறிதல் சோதனையையும் தவிர்க்கலாம். ஆனால் நோய்த்தாக்கக் குறிகளை வெளிப்படுத்தாத பெரும்பாலான பால்வினை நோய்களை இந்த அணுகுமுறையால் கண்டறிய முடியாது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ‘இனப்பெருக்கப் பாதைத் தொற்றுக்கள் மற்றும் உடலுறவால் பரவும் தொற்றுக்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு பற்றிய தேசிய வழிகாட்டுதல்கள் 2014’ என வழங்கப்பட்டுள்ள பாய்ச்சற்படம் ஒவ்வொரு நோய்த்தாக்க மேலாண்மைக்காகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்தப் பால்வினை நோய்களுக்கான தேசிய தரப்படுத்தப்பட்ட மருத்துவ நெறிமுறை அனைத்து நோயாளிகளுக்கும்  சுகாதாரச் சேவையின் அனைத்து மட்டங்களிலும் போதுமான சிகிச்சை கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.

பல பால்வினை நோய்களுக்கு பலனளிக்கும் சோதனை தற்போது கிடைக்கிறது.

 • தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரே தடவையிலான பலன்தரும் நுண்ணுயிர்க்கொல்லிகள் மூலம் மூன்று பாக்டீரியா பா.வி.நோய்களும் (கிளமைதியா, மேகவெட்டை மற்றும் மேகநோய்) மற்றும் ஓர் ஒட்டுண்ணி பா.வி.நோயும் (திரிக்கோமோனியம்) பொதுவாகக் குணப்படுத்தக்கூடியவை.
 • அக்கி மற்றும் எச்.ஐ.வி. நோய்களை எதிர் வைரல் மருந்துகள் குணப்படுத்த முடியாவிட்டாலும் நோய்ப்போக்கை ஒழுங்குபடுத்த வல்லவை.
 • கல்லீரல் அழற்சி B-க்கு, நோய்த்தடுப்பு  மண்டல ஒழுங்குபடுத்திகள் (இண்டர்ஃபெரான்) மற்றும் எதிர்வைரல் மருந்துகள் வைரசை எதிர்த்துப் போராடவும் கல்லீரல் சிதைவைக் குறைக்கவும் உதவும்.

(ஆ) அறிவுறுத்தலும் ஆலோசனையும்: ஒரு சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் நோயாளிக்கு உதவிசெய்யப் பால்வினை நோய்களோடு இணைந்துள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, சாத்தியமான நடவடிக்கை அணுகுமுறையை கண்டறியும் அந்தரங்கமான ஊடாடும் நடவடிக்கையே இங்கு ஆலோசனை என்று வரையறுக்கப்படுகிறது. ஆலோசனையில் அடங்கும் பிரச்சினைகளாவன:

 • தற்போதைய பால்வினையைப் பற்றியும் அது எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் நோயாளிக்கு அறிவுறுத்தல்.  பாக்டீரியா பால்வினை குணப்படுத்தக் கூடியது என்பதையும், வைரல் பா.வி. நோய் மீண்டும் வரக்கூடியது என்பதையும், சிகிச்சையை ஒழுங்காக எடுக்காவிட்டால் ஏற்படும் விளைவு பற்றியும் நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும். (தொடர் பிறப்புறுப்பு அக்கியும், யோனியழற்சியும் மிகவும் துன்பம் தருவதோடு பலமுறை நோயாளிகளுக்கு ஆலோசனையும் தேவைப்படுவன வாகும்).
 • பால்நோய் கண்டறிதலை துணைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
 • நோயாளியின் எச்.ஐ.வி ஆபத்தையும் மதிப்பிட்டு சோதனை தேவையா என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
 • மலட்டுத் தன்மை, பிறவி மேகநோய் போன்ற சிக்கல்களைப் பற்றி நோயாளி அறிந்துகொள்ள உதவ வேண்டும்.
 • இணையருக்கும் பரவக்கூடிய குணப்படுத்த முடியாத பிறப்புறுப்பு அக்கி அல்லது பருவைக் கையாளுவது பற்றி நோயாளிக்குக் கூறவேண்டும்.
 • இணையருடன் காப்புறை பயன்பாட்டைப் பற்றிக் கலந்துரையாடும் முறைகளை உள்ளடக்கிய எதிர் காலத்தில் தொற்றை எவ்வாறு தடுப்பது என்பதைக் குறித்து நோயாளிக்கு அறிவுறுத்த வேண்டும்.
 • அந்தரங்கம் பேணுதல், வெளிப்படுத்துதல், வாழ்க்கைத் துணை, இணையர், குடும்பம், நண்பர்களிடம் இருந்து எழும் புறக்கணிப்போடு கூடிய எதிர்வினைகள் மற்றும் வன்முறையை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதைப் பற்றி நோயாளியிடம் கூற வேண்டும்.
 • நோயாளிகள் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவதையும் நோய்த் தடுப்பில் அவர்களுக்குள்ள பொறுப்பைப் பேணாவும் உதவ வேண்டும்.

(இ) இணையர் மேலாண்மையும் சிகிச்சையும்:

உடலுறவு இணையரின் நோய்மேலாண்மை, குறியீட்டு நோயாளியின் நோய்கண்டறிதலை (நோய்த்தாக்க அல்லது குறிப்பான) அடிப்படையாகக் கொண்டது. இதற்குப் பின்வரும் மூன்று உத்திகளைத் தழுவிக்கொள்ளலாம்:

 • ஆய்வகச் சோதனை எதுவும் இல்லாமல் உடனடியாக நோய்விவரவியல் சிகிச்சை (குறியீட்டு நோயாளியின் நோய்கண்டறிதலை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை) அளிக்கவும்.
 • பிற உடனடி நோய்விவரவியல் சிகிச்சை. ஆனால் தொடர் உறுதிப்படுத்தும் ஆய்வகச் சோதனைக்காக மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளவும்).
 • உறுதியான ஆய்வகச் சோதனைகள் கிடைக்கும் வரை சிகிச்சையைத் தாமத்தப்படுத்தவும்.

நோய்விவரவியல் சிகிச்சையை (குறியீட்டு நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை) அனைத்து உடலுறவு இணையருக்கும் அளித்தல்.

(ஈ) எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் சோதனையை அளிக்கவும்- பால்வினை நோய் குறித்த கலந்தாலோசனை  எச்.ஐ.வி தடுப்பு பற்றிய அறிவுறுத்தலை அளிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். வரையறைப்படி பால்வினை நோயாளிகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான ஆபத்தில் இருப்பவர்கள் ஆகும்.

(உ) தொடர் நடவடிக்கை – பால்வினை நோயின் விரிவான நேர்வு மேலாண்மையின் ஒரு பகுதி பொறுத்தமான மருத்துவத் தொடர் நடவடிக்கை ஆகும். ஒவ்வொரு நோய்த்தாக்கத்துக்குமான தொடர் நடவடிக்கை அட்டவணை அதற்குரிய பாய்ச்சல்படத்தில் (இந்திய அரசால் அளிக்கப்பட்டது*) விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பபட்ட கால அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பும் அறிகுறிகள் மோசமானாலோ அல்லது நீடித்தாலோ மீண்டும் ஆலோசனைக்காக வரவேண்டும்.

குறிப்புகள்:

naco.gov.in/upload/2014 *

apps.who.int/iris/bitstream

apps.who.int/medicinedocs/en/

பால்வினை நோயின் விளைவுகள்:

 • பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல்நலத்தில் மட்டும் அல்லாமல் உளவியல் மற்றும் சமூக நலவாழ்விலும் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
 • பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், அது பெண்களுக்கு கிளமைதியா, மேகவெட்டை, இடுப்பு அழற்சி ஆகிய நோய்களை உருவாக்கும். இதனால் மலட்டுத்தன்மையும் இடமாறிய கர்ப்பமும் ஏற்படலாம்.
 • கோனோகாக்கஸ் மற்றும் கிளாமைதியா பாக்டீரியா தொற்று ஆண்களுக்கு விரைமேல் அழற்சி மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
 • கர்ப்ப காலத்திலும் பேற்றின் போதும் தாய்-சேய் பால்வினை நோய் பரவலால் இறந்து பிறத்தல், பிறந்தகுழந்தை இறப்பு, குறைந்த எடையோடு பிறத்தல், குறைப்பிரசவம், சீழ்ப்பிடிப்பு, நிமோனியா, பிறந்த குழந்தை வெண்படல அழற்சி, மற்றும் பிறவி குறைபாடுகள் ஏற்படலாம்.
 • மனிதக் காம்புக்கட்டி வைரஸ் (HPV) தொற்றால் கருப்பைப் புற்று ஏற்படுகிறது.
 • பால்வினை நோய் எச்.ஐ.வி. ஆபத்தை அதிகரிக்கிறது. அக்கி மற்றும் மேக நோய் இவ்வாபத்தை மூன்று மடங்கும் அதற்கு மேலும் அதிகரிக்கிறது. எச்.ஐ.வி.யோடு வாழ்வோரும் இன்னொரு பால்வினை நோயால் தாக்கப்பட்டால் அதை இணையருக்குப் பரப்பக் கூடும்.
 • நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு மேகவெட்டை வைரஸ் திரிபையும் கூட்டு மருந்து எதிர்ப்பையும் கொண்ட மேகவெட்டை நோய்த் தொற்று பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக பெண்களின் மலட்டுத் தன்மையைத் தடுப்பதில் இது ஒரு பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.

குறிப்புகள்:

www.who.int/maternal_child_adolescent/

www.who.int/mediacentre/factsheets

apps.who.int/iris/bitstream

apps.who.int/iris/bitstream

www.who.int/reproductivehealth

முதன்மைத் தடுப்பு அல்லது பாதிக்கப்படாதவருக்குத் தொற்றைத் தடுத்தல்: பால்வினை நோய் பரவலைக் குறைக்க இதுவே மிகவும் பலனளிக்கும் உத்தியாகும். மேலும் இதை அனைத்து சுகாதாரப் பராமரிப்பு அமைப்பிலும் ஒருங்கிணைக்க முடியும்.

இரண்டாம்கட்டத் தடுப்பு: சமுதாயத்தில் மேலும் தொற்று பரவாமல் தடுக்கிறது. நோயாளிக்கு ஏற்படும் சிக்கல்களையும் மறுதொற்றையும் தடுக்கும்.

ஆலோசனை மற்றும் நடத்தை அணுகுமுறைகள்: பால்வினை நோய் (எச்.ஐ.வி. உள்ளடங்கியது) முதன்மைத் தடுப்புக்குப் பின் ஆலோசனையும் நடத்தையியல் குறுக்கீடுகளும்.

இவற்றில் அடங்குவன:

 • உடலுறவு, பால்வினை நோய்கள், எச்.ஐ.வி பற்றிய விரிவான கல்வியும் சோதனைக்குப் பின்னான ஆலோசனையும்
 • பாதுகாப்பான உடலுறவு/ஆபத்தைக் குறைக்கும் ஆலோசனை, காப்புறை ஊக்கப்படுத்துதல்.
 • இளைஞர், பாலியல் தொழிலாளர், ஆண்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்கள், ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோர் ஆகிய நோயாபத்துடைய முக்கிய மக்களை இலக்காகக் கொண்ட மருத்துவக் குறுக்கீடுகள்.

தடுக்கும் முறைகள்: காப்புறை போன்ற தடுக்கும் முறைகள் எச்.ஐ.வி. உள்ளடக்கிய பால்வினை நோய்களுக்கு எதிரான பலன் தரும் முறையாகும். பெண்களுக்கான காப்புறைகளும் பலன் அளிப்பவையே. ஆனால் அவை தேசிய திட்டங்களில் ஆணுறைகளைப் போலப் பரவலாக ஊக்கப்படுத்தப் படுவதில்லை.

தடுப்புமருந்துகள்:

கல்லீரல் அழற்சி  B  மற்றும் மனித காம்புக்கட்டி வைரஸ் (HPV) ஆகிய இரண்டு பால்வினை நோய்களுக்கு அதிக பலன் அளிக்கும் தடுப்பூசிகள் இருக்கின்றன.

கல்லீரல் அழற்சி  B-க்கு எதிரான தடுப்பூசி உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது நான்கு தடவைகளாகத் தரப்படுகிறது: பிறப்பில் (24 மணி நேரத்துக்குள்); முதன்மை மூன்று வேளைகள்: 6, 10, 14 வது வாரங்கள் (nhp.gov.in/universal-immunization-programme).

HPV தடுப்பு மருந்து கருப்பை வாய் புற்றைத் தடுக்கக் கூடும். 9-14 வயதுடைய இளம்/ முன்னிளம் பெண்களுக்கு இந்த இருவேளை தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

அக்கி, எச்.ஐ.வி., கிளாமைதியா, மேகவெட்டை, மேகநோய் மற்றும் திரிகோமோனியத்திற்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

பிற உயிர்மருந்தியல் குறுக்கீடுகள்: சில பால்வினை நோய்களைத் தடுக்க ஆண் நுனித்தோல் அகற்றல் மற்றும் நுண்ணுயிர் அழிப்பு முறைகள் கையாளப்படுகின்றன.

 • வேற்றுப்பால் உடலுறவால் ஏற்படும் எச்.ஐ.வி. தொற்றை 60% வரையிலும், அக்கி, எச்.பி.வி. போன்ற பால்வினை நோய்களையும் ஆண் நுனித்தோல் அகற்றல் கட்டுப்படுத்துகிறது.
 • பெண்ணுறுப்பு நுண்ணுயிர்கொல்லும் முறை எச்.ஐ.வி தொற்றுக்கு கலப்பு முடிவையும், எச்.எஸ்.வி-2 க்கு சற்றே பலனையும் அளித்துள்ளன.

குறிப்புகள்:

http://apps.who.int/iris/bitstream

http://www.who.int/mediacentre

http://www.nhp.gov.in/universal

https://www.acog.org/-/media/

Park’s Textbook of Preventive & Social Medicine, 22nd Edition, Sexually Transmitted Diseases, 303-313.

 • PUBLISHED DATE : Feb 04, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Feb 04, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.