கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் ஒரு வைரல் நோயாகும். இது உண்ணி வைரசால் (நெய்ரோவைரஸ்) உண்டாகிறது. இது விலங்கில் இருந்து மனிதனுக்கு நோயைப் பரப்புகிறது. மனிதர்களுக்கு இது கடுமையான நோய் ஆகும். இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% ஆகும்.
முதன்முதலில் 1944-ஆம் ஆண்டு கிரிமியாவில் (முன்னாள் ருசியா) இந்நோய் வெளிப்பட்டது. கிரிமியன் குருதிக்கசிவு காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டது. பின்னர், 1969-ல், காங்கோவில் 1956-ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்க்கும் இதே கிருமிகளே காரணம் என்று கண்டறியப்பட்டு இரு இடங்களின் பெயரும் இணைக்கப்பட்டு கிரிமியன் – காங்கோ குருதிக் கசிவு நோய் என்று பெயரிடப்பட்டது.
இந்நோய் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்ற்ம் மத்திய ஆசியாவின் பல நாடுகளில் பரவலாகவும் கொசோவா, அல்பேனியா, ஈரான் மற்றும் துருக்கியில் ஆங்காங்கேயும் காணப்படுகிறது.
ஜனவரி 2011-ல் அகமதாபாத்தில் (குஜராத்) ஏற்பட்ட ஒரு மருத்துவ மனை நோய்பரவலின் போது இந்தியாவின் முதல் கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் நேர்வு உறுதிசெய்யப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் நோய்பரவல் அறிவிக்கப்பட்டது. 2012-2015 காலகட்டத்தில் குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் கால்நடைகளில் இருந்து உண்ணி மூலமும், மருத்துவ மனைகளிலும் ஏற்பட்ட பல நோய்பரவல்கள் அறிவிக்கப்பட்டன. குஜராத்தின் 6 மாவட்டங்களிலும் (அகமதாபாத், அமரேலி, பதான், சுரேந்திரநகர், கச் மற்றும் ஆரவல்லி) இராஜஸ்தானின் 3 மாவட்டங்களிலும் (சிரோகி, ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர்) நேர்வுகள் பதியப்பட்டன. உத்திரப்பிரதேச மாநிலத்திலும் ஒரு நேர்வு அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆண்டுக்கு 50-60 நேர்வுகளை அறிவிக்கிறது.
கொள்ளை நோயாகப் பரவும் தன்மையாலும், ஏற்படுத்தும் அதிகமான இறப்பு விகிதத்தாலும் (10-40%), மருத்துவ மனைகளில் பரவும் தன்மையாலும், சிகிச்சை அளிப்பதிலும், தடுப்பதிலும் இருக்கும் சிரமங்களினாலும் கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் நோயின் பரவல் பொது சுகாதார சேவைகளுக்கு ஒரு ஆபத்தாக அமைகிறது.
குறிப்புகள்:
www.who.int/mediacentre/factsheets
www.ncdc.gov.in/writereaddata/linkimages
wwwnc.cdc.gov/eid/pdfs/vol21no10
காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல்,கழுத்துவலியும் விறைப்பும், முதுகுவலி, தலைவலி, கண்வலி மற்றும் ஒளிக்கூச்சத்தோடு அறிகுறிகள் திடீரென ஏற்படும்.
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் தொண்டை வலி முன்னர் தோன்றும். தொடர்ந்து கடுமையான மனநிலை மாற்றமும் குழப்பமும் உண்டாகும். இரண்டு முதல் நான்கு நாள் கழித்து மனக்கலக்கத்திற்குப் பதில் தூக்கக்கிறக்கம், மனவழுத்தம் மற்றும் களைப்போடு, வயிற்றுவலி மேல்வலது பகுதியில் நிலைக்கும். கல்லீரல் விரிவு கண்டறியப்படத் தக்கதாக இருக்கும்.
வேகமான இதயத் துடிப்பு, நிணநீர்ச்சுரப்பி வீக்கம், உடலின் உட்பகுதியில் வாய், தொண்டை போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளிலும் தோலிலும் உட்தோல் இரத்தக் கசிவால் உண்டாகும் சொறி. பின் இது தோலடி இரத்தக்கோர்வையாகவும், மலம் வழி வெளியேறும் மேற்குடல் குருதிக்கசிவு, சிறுநீரில் இரத்தப்போக்கு, ஈறுகளில் இரத்தம் போன்ற இரத்தக்கசிவு நிகழ்வுகளாகவும் மாறும்.
பொதுவாகக் கல்லீரல் அழற்சியும், கடுமையான நோயாளிகளுக்கு சிறுநீரகச் செயல்பாடு குன்றுதலும், நோய் ஏற்பட்டு ஐந்தாவது நாளில் திடீர் கல்லீரல் அல்லது நுரையீரல் செயலிழப்பும் ஏற்படும்.
இந்நோயால் உண்டாகும் மரண விகிதம் ஏறக்குறைய 30 %. நோய் ஏற்பட்டு இரண்டாவது வாரத்தில் மரணம் ஏற்படுகிறது. குணமடையும் நோயாளிகளுக்கு நோய் ஏற்பட்டு ஒன்பது அல்லது பத்தாவது நாளில் இருந்து முன்னேற்றம் தொடங்கும்.
குறிப்பு:
புன்யாவைரிடே குடும்பத்தையும் நெய்ரோவைரஸ் பேரினத்தையும் சேர்ந்த வைரசால் கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் (CCHF) ஏற்படுகிறது. இது பொதி வைரஸ் என்பதால் இதனை எளிதாகச் செயலிழக்கச் செய்யமுடியும். 400 C-ல் வைக்கப்படும் இரத்தத்தில் CCHF வைரஸ் 10 நாட்கள் வரை நிலையாக இருக்கும்.
நோய்க்கடத்தி:
கிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சலின் பொது நோய்க்கடத்தி இக்சோடிடே குடும்பத்தையும் ஹயாலோமா பேரினத்தையும் சேர்ந்ததாகும். இவை விலங்குகளிலும் மனிதரிலும் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள். இவற்றின் ஆண்-பெண் இரண்டுமே நோய்க்கடத்திகளாகச் செயல்படும்.
CCHF வைரஸ் பரந்த வகை வனவிலங்குகளிலும், முயல், எலி, ஒட்டகம், கால்நடை, செம்மறி, வெள்ளாடு பொன்ற வீட்டு விலங்குகளிலும் தொற்றை உண்டாக்கும்.
சுற்றுச்சூழல் காரணிகள்:
சூழலியல் மாற்றங்கள், வறுமை, சமூக நிலைத்தன்மை இன்மை, மோசமான சுகாதாரச் சேவைகள் மற்றும் தரமான தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்மை ஆகியவை CCHF வைரஸ் அதிகமாகப் பரவ வழிவகுத்துள்ளன.
பரவும் முறை:
விலங்கில் இருந்து மனிதருக்குப் பரவல்: உண்ணி கடிப்பதாலோ, வெட்டும் போது அல்லது வெட்டிய உடன் தொற்றுள்ள விலங்கின் இரத்தம் அல்லது திசுவுடன் ஏற்படும் தொடர்பாலோ CCHF வைரஸ் மனிதருக்குப் பரவுகிறது. விவசாயத் தொழிலாளர்கள், இறைச்சிக்கடைப் பணியாளர், கால்நடை மருத்துவர் போன்ற கால்நடை தொழில் துறையினருக்கே பெரும்பாலான நேர்வுகள் நிகழ்ந்துள்ளன.
மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவல்:
நோயாளிகளின் இரத்தம், உடல் பாய்மங்கள், கழிவுகள் போன்றவை தோல் வெடிப்பு அல்லது சளிச்சவ்வில் படும்போது தொற்று ஏற்படுகிறது. உதாரணமாக மருத்துவப் பணியாளருக்கு தற்செயலாக ஊசியால் ஏர்படும் காயத்தைக் கூறலாம். மருத்துவ மனையில் தகுந்த முறையில் கிருமீ நீக்கம் செய்யாமை, ஊசி மறுபயன்பாடு மற்றும் கிருமியால் அசுத்தமான மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றால் நோய் பரவக் கூடும்.
நோயரும்பும் காலம்: பரவும் வகையைப் பொறுத்து அமையும். உண்ணி கடியால் பரவினால் பொதுவாக 1-3 நாட்கள்; அதிகபட்சம் 9 நாட்கள்.
தொற்றுள்ள இரத்தம் அல்லது திசுவால் பரவினால் குறைந்தது 6 நாளும் ஆவணப்படி அதிகபட்சம் 13 நாளும் ஆகும்.
CCHF வைரஸ் மருத்துவ மனைச் சூழலில் மிகவும் வேகமாகப் பரவும். நோயாளியின் இரத்தம் அல்லது கசிவுகளினால் ஏற்படும் தொற்று மருத்துவ மனைகளில் பரவலாக உள்ளது.
குறிப்புகள்:
www.who.int/mediacentre/factsheets
துரித கண்டறிதல் சோதனை எதுவும் இல்லை.
CCHF சந்தேகம் எழுந்தால் சிறப்பு வசதிகள் உள்ள அதிக அளவு பாதுகாப்புள்ள உயிரியல் ஆய்வகங்களிலேயே சோதனை நடத்தப்படுகிறது.
ஊனீரில் IgG மற்றும் IgM எதிர்பொருட்களைக் கண்டறிதல்: நொதியோடு இணைந்த தடுப்பாற்றல் மதிப்பீடு ("ELISA" அல்லது "EIA" முறைகள்) மூலம் நோய் ஏற்பட்டு ஏறத்தாழ ஆறாவது நாளில் இருந்து கண்டறியப்படுகிறது. நான்கு மாதங்கள் வரை IgM கண்டறியத் தக்கதாக இருக்கும்; IgG அளவுநிலை குறைந்து வந்தாலும் ஐந்து ஆண்டுகள் வரை கண்டறியத் தக்கதாக இருக்கும்.
இரத்தம் அல்லது திசு மாதிரிகளில் வைரசைக் கண்டறிதல்: உயிர் ஆபத்துள்ள நோயாளிகளுக்கும், நோய் ஏற்பட்டு சில நாட்களே ஆன நோயாளிகளுக்கும் அளக்கக்கூடிய அளவுக்கு எதிர்பொருள் பதில்வினை ஏற்பட்டிருக்காது. இவர்களுக்கு இரத்தம் அல்லது திசு மாதிரிகளில் வைரஸ் கண்டறியப்படுகிறது. நோய் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்களில் திசு அல்லது இரத்த மாதிரிகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் வைரசுகள் செல்வளர்ச்சி மூலம் பெருக்கப்படுகிறது. தடுப்பாற்றல் ஒளிர்மம் அல்லது EIA மூலம் சோதிக்கப்படும் திசு மாதிரிகளில் சிலசமயம் வைரல் விளைமங்கள் காணப்படலாம்.
பாலிமரேஸ் தொடர் வினை (PCR) மற்றும் மெய்-நேர PCR, வைரல் மரபணுவைக் கண்டறியும் ஒரு மூலக்கூற்று முறையாகும். இம்முறை கண்டறிதலுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பு:
மனிதர்களில் மிகவும் ஆபத்தான நோயாகும். மரண விகிதம் இதில் அதிகம். இதற்குப் பொதுவாக ஆதரவு மருத்துவமே அளிக்கப்படுகிறது.
பொதுவான ஆதரவு மருத்துவமே சிகிச்சையின் முக்கியத் தூணாகும். இரத்த அளவு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் இரத்தப் பொருட்கள் அளிக்கும் மாற்று சிகிச்சை வழங்கப்படுகிறது.
உறுதி செய்யப்பட்ட CCHF தொற்றுக்கு எதிர்வைரல் மருந்துகள் மூலம் மருத்துவம் அளிக்கப்படுகிறது. தெளிவான பலன்கள் கிடைக்கின்றன. வாய்வழி மற்றும் நரம்புவழி அளிக்கப்படும் இரண்டு வகை மருந்துகளுமே பலன் அளிக்கின்றன.
இரண்டாம் கட்டத் தொற்றுக்கான பொருத்தமான மருத்துவம் நிறுவப்பட வேண்டும்.
குறிப்பு:
மனிதர்களுக்குப் பயன்படுத்தக் கூடியப் பாதுகாப்பான பலனளிக்கக் கூடிய தடுப்பு மருந்துகள் எதுவும் தற்போது பயன்பாட்டில் இல்லை. CCHF ஒரு விலங்குசார் நோய்க்கடத்தியால் பரவும் நோய் என்பதால் மருத்துவயியல், கால்நடையியல் மற்றும் பூச்சியியல் நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையே நோய் பரவுதலைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழியாகும். ஆபத்துக் காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் நோயாளிகளுக்கு அறிவைப் புகட்டுதலாலும் வைரசு பரவும் ஆபத்தைக் குறைக்கும்.
பொது சுகாதார ஆலோசனைகள் பின்வரும் அம்சங்களை வலியுறுத்த வேண்டும்:
i) உண்ணியில் இருந்து மனிதருக்குப் பரவுவதைக் குறைத்தல்:
ii) விலங்கில் இருந்து மனிதருக்குப் பரவுவதைக் குறைத்தல்:
iii) சமுதாயத்தில் மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவலைக் குறைத்தல்:
சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் தொற்றைக் கட்டுப்படுத்தல்:
சந்தேகப்படும் அல்லது உறுதியான CCHF நோயாளிகளைப் பராமரிக்கும் அல்லது அவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சோதனை மாதிரிகளைக் கையாளும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் தர அளவுகோலின் படியான தொற்று கட்டுபாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். அடிப்படையான கைச்சுகாதாரம், தனிநபர் பாதுகாப்பு சாதனப் பயன்பாடு, பாதுகாப்[பான ஊசி நடைமுறை, பாதுகாப்பான பிண அடக்க முறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
சந்தேகத்திற்குரிய CCHF நோயாளிகளின் சோதனை மாதிரிகளைப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தகுந்தபடி சோதனை வசதிகள் கொண்ட ஆய்வகத்தில் சோதனை செய்ய வேண்டும்.
CCHF என சந்தேகப்படும் நோயாளிகளைப் பராமரிப்போருக்கு உ.சு.நி. எபோலா மற்றும் மார்புர்க் இரத்தக்கசிவு காய்ச்சலுக்கு உருவாக்கியுள்ள தொற்றுக் கட்டுப்பாட்டு முறைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
குறிப்புகள்: